புதுமணத் தம்பதியர் சென்ற கார் கவிழ்ந்து விபத்து: பெண் பலி
By DIN | Published On : 19th May 2019 07:39 AM | Last Updated : 19th May 2019 07:39 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் அருகே புதுமணத் தம்பதியர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணமகனின் அத்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணப்பெண் உள்ளிட்ட இருவர், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த காருடையாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் குமாரபாளையம், கல்லாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த சசிகலா தேவிக்கும் (26) வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமகள் சசிகலாதேவி வீட்டுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை புதுமணத் தம்பதிகள் மற்றும் கரூர் பரமத்தி அடுத்த குருவம்பட்டியைச் சேர்ந்த மணமகனின் அத்தை மல்லிகா (52), காருடையாம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (30) ஆகியோர் காரில் கரூர் பரமத்திக்கு சென்று கொண்டிருந்தனர். காரை காருடையாம்பாளையத்தைச் சேர்ந்த பிரசாத் (28) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கந்தம்பாளையம் அடுத்த பீச்சம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மல்லிகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த உறவினர் சதீஷ்குமார் மற்றும் மணமகள் சசிகலாதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.