வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 19th May 2019 07:40 AM | Last Updated : 19th May 2019 07:40 AM | அ+அ அ- |

வைகாசி விசாகத்தையொட்டி, சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தங்கம், வெள்ளி மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருகப்பெருமான் அவதரித்த தினம் வைகாசி விசாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சனிக்கிழமை வைகாசி விசாகத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு காலை 10 மணியளவில், பால், இளநீர், திருநீர், திரவியம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. காலை முதல் பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். மோகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.
வைகாசி விசாகத் தினத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கடைவீதி முருகன் கோயில், கருமலை தண்டாயுதபாணி கோயில், சேந்தமங்கலம் தத்தாத்தீஸ்வரர் கோயில், வள்ளிபுரம் கோயில் என மாவட்டம் முழுவதும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பரமத்திவேலூரில்... பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோயில், பச்சைமலை முருகன் கோயில், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர் கோயில், பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள சுப்பிரமணியர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் வைகாசி விசாக பெருவிழா சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.