போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இலவச பயிற்சி மையம்: ஆட்சியர்
By DIN | Published On : 26th May 2019 05:04 AM | Last Updated : 26th May 2019 05:04 AM | அ+அ அ- |

பழங்குடியின மாணவ, மாணவியர் மத்திய, மாநில அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக முள்ளுக்குறிச்சியில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்படுகிறது.
இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழங்குடியினர் நலத் துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணி, ரயில்வே, மத்திய அரசுப் பணி ஆகியவற்றுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.
இப் பயிற்சி மையத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவியர் பயிற்சி பெறலாம். அவர்களுக்கான இப் பயிற்சியானது 50 நாள்களுக்கு அளிக்கப்படும். இப் பயிற்சிக்கான கையேடுகள் அனைத்தும் மையத்தில் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள பழங்குடியின மாணவர்கள், கொல்லிமலையில் உள்ள பழங்குடியின திட்ட அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று நிறைவு செய்து கொடுக்கலாம். இவ்வாய்ப்பினை பழங்குடியின மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.