நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரி முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் 76 பேருக்கு பதக்கம் மற்றும் பட்டங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நாமக்கல் வேட்டாம்பாடியில் பி.ஜி.பி.வேளாண் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில், 2013 - 2017 வரையில் பயின்ற மாணவ, மாணவியர் 76 பேருக்கு பதக்கம் மற்றும் பட்டங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பி.ஜி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் எம்.கணபதி தலைமை வகித்தார். பி.ஜி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்.குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 6 பேருக்கு பதக்கம் மற்றும் பட்டங்களையும், 70 பேருக்கு பட்டச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டி பேசினார்.
அப்போது, உலகம் முழுவதும் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. மத்திய, மாநில அரசுத் துறைகள் மட்டுமின்றி, வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பலதரப்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கனவு காண சொன்னது போல், இத்துறையில் பயின்று எதிர்கால கனவுகளை ஒவ்வொரு மாணவ, மாணவியரும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். விவசாயம் என்பது என்றும் அழியாது, வளர்ந்து வரும் இத்தொழிலை சுயமாகவும் செய்து மாணவர்களால் சாதிக்க முடியும் என்றார். இவ்விழாவில், பி.ஜி.பி. குழும துணைத் தலைவர் விஜயலட்சுமிபழனிசாமி, வேளாண் கல்லூரி டீன் என்.ஓ.கோபால் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.