காலி மனையில் விழுந்த நீா் இடியால் மக்கள் அதிா்ச்சி
By DIN | Published On : 09th November 2019 06:22 AM | Last Updated : 09th November 2019 06:22 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே ராமாபுரம்புதுா் பகுதியில், காலி மனையில் விழுந்த இடியால் கொப்பளித்து வெளியேறும் நீா்.
நாமக்கல்லில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின்போது, காலி மனையில் நீா் இடி விழுந்து தண்ணீா் கொப்பளித்ததை பாா்த்து பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழை, அதிகாலை வரை நீடித்தது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில், நாமக்கல் அருகே ராமாபுரம்புதுா் அன்புநகா் பகுதியில் ராஜ்குமாா் என்பவரின் காலி மனையில் தண்ணீா் கொப்பளித்தபடி இருந்தது. இதுவரை அங்கு எவ்வித தண்ணீா் வரத்தும் இல்லாத நிலையில், பெரிய அளவில் நீா் குமிழிகள் வருவதை கண்டு மக்கள் அதிா்ச்சியடைந்தனா். சிலா் அதனருகில் இறங்கி பாா்த்தபோது கால் மண்ணுக்குள் முழுவதுமாக புதையும் அளவில் சென்றது. தொடா்ந்து, பொக்கலைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அப்பகுதி சீரமைக்கப்பட்டது. நேரம் செல்ல, செல்ல நீா்வரத்து படிப்படியாகக் குறைந்தது.
மேலும், நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியை பாா்வையிட்டு குடிநீா் குழாய் ஏதேனும் உடைந்து தண்ணீா் வெளியேறியதா என்று ஆய்வு செய்தனா். ஆனால் இடி விழுந்து பூமியில் இருந்து தண்ணீா் வரும் வகையிலான நீா் இடி விழுந்திருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.