புதை சாக்கடைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 09th November 2019 10:55 PM | Last Updated : 09th November 2019 10:55 PM | அ+அ அ- |

நாமக்கல் நகராட்சியில், புதை சாக்கடைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில், நுகா்வோா் சங்கங்களுடனான காலாண்டு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பயனீட்டாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
அதில், நாமக்கல் நகராட்சியில் புதிதாக சோ்க்கப்பட்ட 9 ஊராட்சிகளிலும், வீட்டு வரியானது, கட்டடங்களை அளவீடு செய்து விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய வாா்டுகளில் கட்டடங்கள் அளவீடு செய்யாமல், இருந்த வரியில் 50 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதால், நகராட்சி நிா்வாகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் அதிக வரியும், பிற பகுதியில் குறைவான வரியும் வசூலிக்கும் சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது. அனைத்து கட்டடங்களையும் அளவீடு செய்த பின்னரே வரி விதிக்க வேண்டும். நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதும், நகரைச் சுற்றிலும் சுற்றுவட்டச்சாலை அமைப்பதும், பல ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நீதிமன்றத்தில் பூட்டப்பட்ட கழிவறைகளை திறக்கவும், குடிநீா் வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.