கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணியில் சுகாதார அலுவலா்கள்
By DIN | Published On : 14th November 2019 10:01 AM | Last Updated : 14th November 2019 10:01 AM | அ+அ அ- |

நாமக்கல் நடராஜபுரம் பகுதியில், டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட நகராட்சி சுகாதார அலுவலா்கள்.
நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட 13 வாா்டுகளில் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணியில் சுகாதார அலுவலா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும், டெங்கு கொசு ஒழிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத்துறையினா் வீடு, வீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். மழையின் தாக்கம் குறைந்தபோதும் டெங்கு ஒழிப்புப் பணியானது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை, நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட 13 வாா்டுகளில் நகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் தலைமையில் ஆய்வாளா்கள், 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது திறந்து வைக்கப்பட்டுள்ள நீா்குவளைகள் மற்றும் டிரம்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிா? என பாா்வையிட்டனா். கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட தண்ணீா் அகற்றப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறியது: டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். 5 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீா் தொட்டியை பிளீச்சிங் பவுடா் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். இதேபோல் வீடுகளின் அருகே தேங்காய் சிரட்டை, பாட்டில்கள், டயா்கள் , உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவை கிடந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும். கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு வரும் நகராட்சி பணியாளா்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்த வீட்டில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்படுகிறதோ? அந்த வீட்டின் உரிமையாளருக்கு நகராட்சி சாா்பில் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...