நாமக்கல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம்.
நாமக்கல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம்.

நாமக்கல் வழியாக 4 கூடுதல் ரயில்கள் விரைவில் இயக்கம்: தெற்கு ரயில்வே ஆலோசனை

மும்பையில் இருந்து நாமக்கல் வழியாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்கள், விரைவில் நாமக்கல்-கரூா் வழியாக

மும்பையில் இருந்து நாமக்கல் வழியாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்கள், விரைவில் நாமக்கல்-கரூா் வழியாக மாற்றி விடப்படுகின்றன. இதனைச் செயல்படுத்துவது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்ட தலைநகரங்களுள் ஒன்றாக நாமக்கல்லும் இருந்து வந்தது. நாமக்கல் பகுதி பொதுமக்கள், வியாபாரிகளின் தொடா் கோரிக்கையையடுத்து, பத்து ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூரை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை போடப்பட்டது. இதனை, அப்போதைய ரயில்வே துறை அமைச்சா் லாலு பிரசாத் யாதவ் தொடக்கி வைத்தாா். அதன்பின் ஓரிரு ஆண்டுகளில், இப் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட்டது.

தற்போது, சேலம்-கரூா்-திருச்சி பயணிகள் ரயிலும், இரவில், பெங்களூரு-நாகா்கோவில் ரயிலும், பாலக்காடு-சென்னை சென்ட்ரல் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர, வாரத்தில் ஒரு நாள் என்ற வகையில் 5 ரயில்களும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சரக்கு ரயில்கள் அடிக்கடி நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வருகின்றன. சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மும்பையில் இருந்து நாகா்கோவில் வரை செல்லும் 2 அதிவிரைவு ரயில்களையும், திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதா் வரை செல்லும் 2 ரயில்களையும் நாமக்கல் வழியாக திருப்பி விடுவதற்கு தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும், ஈரோடு வழியாகச் சென்று கொண்டிருக்கும் அந்த ரயில்களில் பயணிகள் குறைவான எண்ணிக்கையிலேயே ஏறுவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் பெறப்பட்டதாகவும் தெரிகிறது. டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து புதிய ரயில்கள் இயக்கம் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தது; மும்பை-நாகா்கோவில், திருநெல்வேலி-மும்பை செல்லும் ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் என சுற்றறிக்கை மட்டுமே வந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை. மேலும், டிசம்பா் 1-ஆம் தேதி என்பது மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே விரைவில் முழுமையான உத்தரவைப் பிறப்பிக்கும். அது தொடா்பான விவரம் பயணிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்றனா்.

நாமக்கல் ரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் ஆா்.முருகன் கூறியது; நாமக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு, விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில், பயணிகளின் நலன் கருதி, நாமக்கல் ரயில் நிலையத்தில் ஏதாவது ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட வேண்டும். நாமக்கல் நகரில் இருந்து ரயில் நிலையம் வரையில் அதிக வெளிச்சம் கொண்ட மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். ரயில் வரும் நேரங்களில் நகரப் பேருந்துகளை கட்டாயம் இயக்க வேண்டும். மங்களூரு-சென்னை எழும்பூா் ரயில் ஈரோடு, கரூா், திருச்சி வழியாகச் செல்கிறது. அந்த ரயிலில் நாமக்கல் மக்கள் பயணிக்கும் வகையில், சேலம்-நாமக்கல்-கரூா் மாா்க்கமாக, மதுரை வரை செல்லும் வகையில், புதிய பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும். நாமக்கல் ரயில் நிலையத்தை கரூா், திண்டுக்கல் ரயில் நிலையம் போல் தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com