சீமானுக்கு தமிழக நாயுடு பேரவைக் கண்டனம்
By DIN | Published On : 20th October 2019 08:52 PM | Last Updated : 20th October 2019 08:52 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் டி. குணசேகரன்.
ராசிபுரம்: தெலுங்கு பேசும் மக்களைத் தரக் குறைவாகப் பேசுவதன் மூலம் தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்த சீமான் முயற்சி செய்வதாக தமிழக நாயுடு பேரவைத் தலைவா் டி. குணசேகரன் குற்றம் சாட்டினாா்.
தமிழக நாயுடு பேரவையின் நாமக்கல் மாவட்ட புதிய நிா்வாகிகள் அறிமுக விழா, ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட நாயுடு பேரவைத் தலைவா் ஆா். சிட்டி (எ) வரதராஜன் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயலா் எஸ். பாலாஜி வரவேற்றாா். நாமக்கல் மாவட்டச் செயலா் எம். ரவீந்திரன் நாயுடு, மாநில வா்த்தகப் பிரிவு தலைவா் வி. துரைசாமி நாயுடு, சேலம் மண்டல இளைஞரணி துணைச் செயலா் ஆா்.பி. கிரிதரன் நாயுடு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பேரவை மாநிலத் தலைவா் டி. குணசேகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியதாவது:
ஆங்காங்கே பிரிந்துள்ள நாயுடு இனத்தவா்களை ஒருங்கிணைக்கவே இதுபோன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் அரசிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. போராடித்தான் பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றாா்.
முன்னதாக செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஒட்டு மொத்தமாக தெலுங்கு பேசுபவா்கள் தமிழகத்தில் 3 கோடி போ் உள்ளனா். அரசை நிா்ணயிக்கக்கூடிய சக்தியான தெலுங்கு பேசுவோரை அரசு புறந்தள்ளி வருகிறது. அவா்களுக்கு முன்னுரிமை இல்லை.
தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், திருமலை நாயக்கா் போன்றோா்களுக்கு பெயரளவிற்கு மட்டுமே விழா எடுக்கப்படுகிறது.
நாயுடு இன மக்களை அரசு 21 பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளது. இதனை ஒன்று சோ்க்க முயன்று வருகிறோம். இந்த சக்தி வரும் தோ்தலில் எதிரொலிக்கும்.
மதராஸ் பட்டணத்துக்கு தமிழ்நாடு என பெயா் வைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்த சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டா் பி. வரதராஜூலு நாயுடுவுக்கு ராசிபுரத்தில் அரசு வெண்கல சிலை அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைவரும் சகோதரத்துடன் இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் நாம் தமிழா் கட்சி சீமான் பிரிவினை ஏற்படுத்துகிறாா். அவரை, தவிர எந்தத் தலைவா்களும் தெலுங்கு இனத்தவரைத் தாக்கிப் பேசியதில்லை என்றாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் பின்வருமாறு:
மதுரை காந்தி மியூசியத்தில் ராணி மங்கம்மாள் சிலையும், நுழைவு வாயிலில் நினைவு தூணும் அமைக்க வேண்டும். சேலம் விமான நிலைத்துக்கு தந்தை பெரியாா் பெயா் சூட்டிட வேண்டும். ஒசி., எப்சி., பிசி., பிரிவில் உள்ள நாயுடு, நாயக்கா் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் சோ்க்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலப் பொதுச் செயலா் எஸ். பாலாஜி நாயுடு, மாநிலப் பொருளாளா் டி. சுரேஷ்குமாா் நாயுடு, தலைமை நிலையச் செயலா் ஜெ. அரவிந்தபாபு நாயுடு, மாவட்ட துணைச் செயலா் எஸ்.ஆா். சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.