நாச்சியார், ரெங்கமன்னார் கோயில் கும்பாபிஷேக விழா
By DIN | Published On : 02nd September 2019 04:17 AM | Last Updated : 02nd September 2019 04:17 AM | அ+அ அ- |

நாமக்கல் நாச்சியார், ரெங்கமன்னார் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி சாலை, சக்திநகர் பகுதியில் நாச்சியார், ரெங்கமன்னார் கோயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மகாகும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையில், சங்கல்பம், விஷ்வக்சேன ஆராதனம், புண்ணியாவசனம், துவார, தோரண, பாலிகை, மண்டல, கும்பபூஜை, ஆதார சக்தி ஹோமம், தத்துவஹோமம், புர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் கடம் புறப்பாடும், 11 மணியளவில், மகா சம்புரோக்ஷனம், தளிகை, வேத, திவ்ய பிரபந்த சாத்துமுறை, பஞ்ச தரிசனம், மரியாதை செய்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர்,
ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், வினோத் பட்டர், கமலமலர்கண்ணன் பட்டர் ஆகியோர் தலைமையில் விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, நாச்சியார், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஆண்டாள் திருக்கல்யாணசபை தலைவர் டி.குமரேசன், அமுதவள்ளி, கார்த்திகேயன், காயத்ரி, நவீன்குமார், தண்டாயுதபாணி, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.