விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகளை வாங்க ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை (செப்.2) கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் வைத்து, மூன்று முதல் ஐந்து நாள்கள் வழிபாடுகள் நடத்துவர். இரவு நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
மேலும், விநாயகர் கோயில்களில் அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வெள்ளி, தங்கம் மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவை மட்டுமின்றி, சிறிய அளவிலான சிலைகளை வாங்கிச் செல்லும் பெண்கள், அதனை வீட்டின் பூஜை அறையில் வைத்து சிறப்பு வழிபாடு செய்வர்.
சதுர்த்தி விழாவையொட்டி, நாமக்கல் நகரின் முக்கியப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. சாதாரணமாக வீடுகளில் வைக்கும் சிலைகள், ரூ.80 முதல் ரூ.2,500 வரையில் விற்பனையானது. பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் சிலைகளைப் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். அதுமட்டுமின்றி, விநாயகருக்கு பூஜையில் பயன்படுத்தப்படும் வண்ணக்குடைகள், தேங்காய், எலுமிச்சை, பூக்கள், மாவிலை, கொழுக்கட்டை மாவு உள்ளிட்டவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தங்கள் பகுதிகளில் சிலைகளை வைப்பதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான சிலைகளை மினி லாரிகளில் ஏற்றிக் கொண்டு இளைஞர்கள் சென்றனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிரச்னைக்குரிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கு, இரவு நேரங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியை மேற்கொள்கின்றனர். வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில், சிலைகள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டு சென்று மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்படவுள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.