அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
By DIN | Published On : 11th September 2019 10:10 AM | Last Updated : 11th September 2019 10:10 AM | அ+அ அ- |

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தீயணைப்புத் துறை சார்பில், அரசுப் பள்ளிகள், மாவட்ட அரசுத் துறை அலுவலகங்கள், நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி சென்னை தலைமை அலுவலகத்தில், அத்துறை அலுவலர்கள் விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வோர் அலுவலகத்திலும் தீத்தடுப்பு, பேரிடர் கால மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். அதனடிப்படையில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் கனகராஜ் தலைமையில் வந்திருந்த வீரர்கள், மின் இணைப்பு துண்டிப்பால் ஏற்படும் தீ விபத்து, சமையல் எரிவாயு உருளையில் ஏற்படும் தீ விபத்து குறித்தும், அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் செயல்விளக்கம் காண்பித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், துப்புரவு ஊழியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜ்மோகன் செய்திருந்தார்.