கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியில் மலர் பூங்கா, நடைபயிற்சி களம்
By DIN | Published On : 11th September 2019 10:05 AM | Last Updated : 11th September 2019 10:05 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் கழிவு நீர் தேங்கியிருந்த கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, மலர் பூங்கா, நடைபயிற்சி களம் உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், ஏரி, குளம், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டும் வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 கோடியில் பல்வேறு பணிகள் இத்திட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், நாமக்கல்-மோகனூர் சாலையில் கழிவு நீர் தேங்கும் குளம்போல் மாறியிருந்த கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியை தூய்மைப்படுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் கட்டுமானப் பொறியாளர் சங்கம் மற்றும் கொண்டிச்செட்டிப்பட்டி பகுதி மக்கள் இணைந்து சுமார் ரூ.75 லட்சத்தில், ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். கடந்த இரண்டு மாதமாக மும்முரமாக நடைபெற்று வந்த இப்பணியை பார்வையிட்ட நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், தொகுதி நிதியில் இருந்து ஓர் குறிப்பிட்ட தொகையை வழங்கி உள்ளார். ஏரியை அழகுபடுத்தும் வகையில், அதன் கரைகளில் நூற்றுக்கணக்கான மரக் கன்றுகளும், மாலை நேரத்தில் பொதுமக்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில் மலர் பூங்காவும், நடைபயிற்சி செல்வதற்கு ஏற்றாற்போல் களம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் முழுமையடைந்தால், நாமக்கல் நகரின் மத்தியில் உள்ள செலம்பகவுண்டர் பூங்கா போல் வண்ண மயமாகிவிடும். மேலும், கொண்டிச்செட்டிப்பட்டி, முல்லை நகர், டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் இந்த ஏரிப் பூங்காவுக்கு வருகை புரிவர். மேலும், மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பினால் பல்வேறு விதமான பறவைகள் அடைக்கலம் புகும் வகையில் ஏரியின் நடுவில் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.