வெப்பச் சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
By DIN | Published On : 11th September 2019 10:11 AM | Last Updated : 11th September 2019 10:11 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் வெப்பச் சலனத்தால் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 10 மில்லி மீட்டர் பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காற்று 6 கிலோ மீட்டர் வேகத்தில் தென் மேற்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: வானம் மிதமான மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மட்டுப்பட்டு, மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசும். பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் இயல்பான அளவுகளில் காணப்பட்டு, காற்றின் ஈரப்பதம் உயர்ந்து இருக்கும். கோழிகளுக்கான வானிலையை பொருத்தவரை, தீவன எடுப்பு, முட்டை உற்பத்தி மற்றும் முட்டை ஓட்டின் தரம் ஆகியவை இயல்பாக காணப்படும். சோயா புண்ணாக்கில் புரதத்தின் அளவை பரிசோதனை செய்த பின்னரே தீவனத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால் அரைத்த தீவனத்தின் புரதத்தை, தேவைக்கேற்ப கோழிகளுக்கு கொடுக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.