விதைகளை தேர்வு செய்யும் முன் பரிசோதிப்பது அவசியம்
By DIN | Published On : 11th September 2019 10:06 AM | Last Updated : 11th September 2019 10:06 AM | அ+அ அ- |

விதைகளை தேர்வு செய்வதற்கு முன் அவற்றை பரிசோதனை செய்வது அவசியம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சு.சித்திரைச் செல்வி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளில் ஒரு பிரிவினர், ஒவ்வோர் முறை விதைப்பு மேற்கொள்ளும் போதும் சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து சாகுபடிக்கு பயன்படுத்துகின்றனர். மற்றொரு பிரிவினர், தங்களின் முந்தைய சாகுபடியில் இருந்து விதை சுத்தி செய்து, விதைகளை சேமித்து அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்துகின்றனர்.
தாங்கள் சேமிக்கும் விதைகள் தரமாக உள்ளதா என பரிசோதிக்காமல், வெறும் புறத்தோற்றம் மற்றும் தூய்மையாக இருந்தால் நல்ல விதையாக இருக்கும் என அனுமானித்து விதைகள் சேமிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இந்த நடைமுறை சில வேளைகளில் தவறாக போய்விடும்.
ஒரு விதைக்குவியலின் விதை மாதிரியினை, அதற்குரிய விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். சரியான முளைப்புத் திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிறரக கலப்பு இல்லாமை ஆகியவற்றை கொண்டுள்ளதா என அறிந்து, தரமானதாக இருந்தால் மட்டுமே முறையான சேமிப்பு முறைகளை கையாண்டு, அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல் பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்படும்.
விவசாயிகள் தங்கள் சொந்த சாகுபடியில் இருந்து விதைகளை சேமிக்க விரும்பினால், அத்தகைய விதைக் குவியலில் இருந்து மாதிரிகளை எடுத்து, நாமக்கல் குளக்கரைத் தெரு, காமராச நகர் பகுதியில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகி, விதைகளை பரிசோதித்து அதற்குரிய முடிவுகளை அறிந்த பின்னரே விதைப்பு அல்லது சேமிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதை மாதிரிக்கு பரிசோதனைக் கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.