கந்துவட்டிக்கு எதிராக உண்ணாவிரதம்:பொதுநலக் கூட்டமைப்புத் தலைவர் கைது
By DIN | Published On : 29th September 2019 04:03 AM | Last Updated : 29th September 2019 04:03 AM | அ+அ அ- |

குமாரபாளையத்தில் கந்து வட்டி வசூலிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பொதுநலக் கூட்டமைப்புத் தலைவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறி கூலித் தொழிலாளர்களுக்கு கடன் கொடுத்து அதிக வட்டி வசூலிக்கும் நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் கந்து வட்டி வசூலிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனைத்து பொதுநலக் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
கோவையில் இருந்து சேலத்துக்கு குமாரபாளையம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு சென்ற முதல்வரிடம் இம்மனுவை கொடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டமைப்புத் தலைவர் வழக்குரைஞர் தங்கவேலுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து மேற்கு காலனி பகுதியில் வழக்குரைஞர் தங்கவேலு, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தங்கவேலுவை குமாரபாளையம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இருந்தபோதிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட திமுக துணைச் செயலர் எஸ் சேகர், கந்துவட்டிக்கு எதிரான கூட்டமைப்புத் தலைவர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை அவர் போராட்டத்தை முடித்துக் கொண்டார். இதையடுத்து, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த தங்கவேலுவை போலீஸார் விடுதலை செய்தனர்.