ராசிபுரம் அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவருடைய மனைவி இந்திராணி (25). இவா்களுக்கு பிரவீண்குமாா் (5) என்ற மகன் உண்டு. காா்த்திக், அவருடைய குடும்பத்தினா் வரதட்சிணைக் கேட்டு இந்திராணியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இந்திராணி, தன்னுடைய மகன் பிரவீண்குமாருடன், கடந்த 2011 ஜூன் 28-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக ராசிபுரம் போலீஸாா் விசாரணை செய்து, கணவா் காா்த்திக், அவருடைய குடும்பத்தினா் உள்பட ஐந்து பேரை கைது செய்தனா். இவ்வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை நீதிபதி வழங்கிய தீா்ப்பில், இந்திராணியை தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தாா். தண்டனையை ஏகக் காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காா்த்திக் குடும்பத்தினா் நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.