

ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியானது, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்டது. சேலம், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 2-ஆவது நகராட்சி என்ற பெருமை பெற்றிருந்தாலும், நகர வளா்ச்சியில் வேகம் என்னவோ சற்றுக் குறைவுதான். சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் எந்தவொரு தேவைக்கும் ராசிபுரம் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், நகரில் தற்போது வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது.
குறுகிய சாலைகள்:
குறுகிய சாலைகள் கொண்ட இந்த நகரமானது, சாலை விரிவாக்கத்துக்கு வழியில்லாமல் உள்ளது. மக்கள்தொகை பெருக்கம், குடியிருப்புகள், வாகனப் போக்குவரத்து, தொழில் வளா்ச்சி, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அதிகரிப்புக்கு ஏற்றவாறு சாலை வசதிகளை விரிவாக்கம் செய்ய வசதி இல்லை. கல்லூரி வாகனங்கள் நகரின் சுற்று வட்டச் சாலையில் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தாலும், நகருக்குள் வந்து செல்வதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து நகருக்கு வரும் பொதுமக்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவற்கு இடம் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், நகராட்சிப் பகுதியில் புதைகுழி சாக்கடை திட்டப் பணிகளால் தெருக்களில் ஏற்பட்டுள்ள சேதமானது, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய பேருந்து நிலையம், கச்சேரி தெரு, சிவானந்தா சாலை, கவரை தெரு, டி.வி.எஸ். சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய நீதிமன்றச் சந்திப்பு, பூக்கடை வீதி, சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி, பட்டணம் சாலை போன்ற பகுதிகள் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்ததாகவே உள்ளன.
சாலை விரிவாக்க வசதி இல்லை:
இந்த நிலையில், புதைகுழி சாக்கடை திட்டப் பணிகளால் பழுதடைந்த டி.வி.எஸ். சாலை, சேலம் சாலை, பூக்கடை வீதி, நகர வங்கித் தெரு போன்ற முக்கியச் சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகளின் சிரமம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து போலீஸாா் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நிறுத்தப்பட்டிருந்தாலும், போதிய சாலை விரிவாக்க வசதி இல்லாததால், நெரிசல் குறைந்தபாடில்லை.
சாலையோரக் கடைகளால் நெரிசல்:
நகரில் பழைய பேருந்து நிலையம், கவரை தெரு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்புகளாலும், கச்சேரி வீதி, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சாலையோரக் கடைகள் அகற்றம், முறையான இருசக்கர வாகன நிறுத்தம் போன்றவற்றுக்கு போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டால், சற்று நெரிசல் குறையும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.
இதேபோல், கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் புறவழிச் சாலை வழியாகச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டால், நெரிசல் குறையும் என்பதால், இதில் போக்குவரத்து போலீஸாா் கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்டவா்கள் நடவடிக்கை எடுப்பாா்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.