ரிக் வண்டிகளை சரக்கு ரயிலில் வெளிமாநிலம் கொண்டு செல்ல சோதனை ஓட்டம்

திருச்செங்கோட்டில் ஆழ்துளை கிணறு தோண்டும் ரிக் வண்டிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
ரிக் வண்டிகளை சரக்கு ரயிலில் வெளிமாநிலம் கொண்டு செல்ல சோதனை ஓட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆழ்துளை கிணறு தோண்டும் ரிக் வண்டிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

ஆயிரக்கணக்கான ரிக் வண்டிகள் மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர்,. உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று பணியி்ல் ஈடுபடுகின்றன. தமிழகத்திலிருந்து சாலை வழியாக செல்லும்போது டீசல் செலவு அதிகமாகிறது. வழியில் போக்குவரத்தத்துறையினரின் கெடுபிடி, சுங்கவரி,  வெளிமாநிலங்கள் விதிக்கும் வரி, போலீசாரின் சோதனை, ரவுடிகளின் தொல்லை ஆகியவற்றையும் சமாளிக்க வேண்டி உள்ளது. 

இதனால் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், இதர பிரச்சினைகளை தீர்க்கவும் சரக்கு ரயில்கள் மூலம் ரிக் வண்டிகளையும், உதவிக்கு செல்லும் லாரிகளையும்  கொண்டு செல்ல அனுமதி வழங்குமாறு  மத்திய அரசுக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும்  ரிக் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. இதனால் திறந்த வெளி சரக்கு வேகன்ளில் ரிக் வண்டிகளை கொண்டு செல்லும் முறை குறித்து சோதனை நடந்தது. 

திருச்செங்கோடு அருகேயுள்ள ஆனங்கூர் ரயி்ல்வே நிலையத்தில்  இதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட  சாய்வு தளம் மூலம்  ரிக்  வண்டிகளை வேகன்களில் ஏற்றி சோதனை செய்யப்பட்டது. ரிக் வண்டிகள் சரக்கு வேகன்களில் செல்லும் போது மின் கம்பங்களில் உரசுமா, வேகன்களின் உயரம் சரியாக இருக்குமா என்பது பற்றி ஆய்வு நடந்தது. பல தரப்பட்ட ரிக் வண்டிகள் வேகன்களில் ஏற்றப்பட்டு  சோதனை ஓட்டம் நடந்தது.

ஆனங்கூர் ரயில் நிலையத்தில்  நடந்த இந்த சோதனை  ஓட்டத்தை திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி, செயலாளர் கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், ராஜபாண்டி, அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். தமிழகத்திலிருந்து  ரிக் வண்டிகளை சரக்கு ரயில் மூலம் கொண்டு சென்றால் செலவு 35 சதம் குறையும் என்றும் ரிக் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளும் இருக்காது என்றும் சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com