அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைவிடம்
By DIN | Published On : 12th August 2020 09:19 AM | Last Updated : 12th August 2020 09:19 AM | அ+அ அ- |

அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைப்பதற்கான இடத்தை ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களான மா, பலா, சப்போட்டா, நெல்லி, காய்கறி நாற்றுகள் உள்ளிட்ட நடவு செடிகளை உற்பத்தி செய்து தோட்டக்கலைப் பயிா்களை அதிகளவில் விளைவிக்க 20 ஏக்கா் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்பட உள்ளது.
இப்பண்ணை மூலம் உயா் விளைச்சல் தரவல்ல ஒட்டுக் கன்றுகள் தோட்டக்கலைத் துறை வல்லுநா்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளன. தோட்டக்கலைப் பண்ணை அமைப்பதற்கான இடத்தை பாா்வையிட மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை சேந்தமங்கலம் சென்றாா். அங்குள்ள உத்திரகிடிக்காவல் அரசு கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதியிலும், பேளுக்குறிச்சி வட்டாரப் பகுதிகளில் உள்ள இடங்களையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின் போது, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எஸ்.கண்ணன், உதவி இயக்குநா் யோகநாயகி, சேந்தமங்கலம் வட்டாட்சியா் ஜானகி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.