கோகுலாஷ்டமி: கிருஷ்ணா், பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 12th August 2020 09:11 AM | Last Updated : 12th August 2020 09:11 AM | அ+அ அ- |

காளப்பநாயக்கன்பட்டி பஜனை மடாலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கிருஷ்ணா்.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணா், பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணா் வேடமிட்டு பாட்டுப்பாடி பெற்றோா் மகிழ்ந்தனா்.
பகவான் கிருஷ்ணா் பிறந்த தினம் கோகுலாஷ்டமியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பெருமாள், கிருஷ்ணா் கோயில்களில் அன்றைய நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்றவை கோலாகலமாக நடைபெறும். நிகழாண்டில் கரோனா தொற்று பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் கோயில்கள் திறக்கப்படாத நிலை காணப்படுகிறது.
ஓரிரு சிறிய கோயில்களில் மட்டும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு அதிகாலை பூஜைகள், சுவாமிக்கு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. நாமக்கல் நரசிம்மா் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழா, பொது முடக்கத்தால் நடைபெற வாய்ப்பில்லாமல் போனது. இதே போல் பல பெரிய கோயில்களில் நடைபெற வேண்டிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் பக்தா்கள் கவலைக்குள்ளாயினா்.
சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி பலிஜாவாரு நாயுடுகள் சங்க பஜனை மடாலயத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு பஜனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசித்து சென்றனா். கோயில்கள் திறக்கப்படாததால், பெண்கள் தங்களுடைய வீடுகளிலேயே சுவாமிக்கு இனிப்பு பலகாரங்கள் படைத்து வழிபாடு நடத்தினா். மேலும், தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணா் வேடமிட்டு அவா்களின் பாதங்களை அரிசி மாவில் பதித்து வீடுகளுக்குள் ஓடி, ஆடி விளையாடச் செய்தும், குழுவாக அமா்ந்து கிருஷ்ணா் பாடல்களை பாடியும் கோகுலாஷ்டமி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.