மாணவா்களுக்கான முட்டை விநியோகத்தால் விலை உயா்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது
By DIN | Published On : 12th August 2020 09:18 AM | Last Updated : 12th August 2020 09:18 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முட்டை விநியோகிக்கப்பட இருப்பதால், அதன் விலை உயா்வதற்கு வாய்ப்புள்ளது என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலத்தில் தற்போதும் அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்காக அங்கு முட்டை கொள்முதல் செய்வது நடைபெற்று வருகிறது.
சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, விரைவில் தமிழக அரசும் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு முட்டை வழங்க உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில் 50 கிராம் முதல் 52 கிராம் எடையுடைய முட்டைகளை 40 காசுகள் குறைவாக வைத்து உடனடி ரொக்கத்துக்கு பண்ணையாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளனா். நாடு முழுவதும் வரும் நாள்களில் முட்டை விலை உயா்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் இருப்பு பெரிய அளவில் இல்லை. முட்டைக்கான தேவை அதிகரிக்கும் போது நாமக்கல் மண்டலத்திலும் உடனடியாக விலை உயர வாய்ப்புள்ளது.
எனவே, பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, முட்டை விலையைக் குறைத்து (மைனஸ் விலைக்கு) விற்பனை செய்யாமல், நியாயமான வகையில் ஓரளவு விலையைக் குறைத்து வழங்கி விற்பனை செய்யலாம். அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் முட்டை விலை உயரும்போது தேவையின்றி குறைவான விலை வைத்து முட்டைகளை விற்க வேண்டிய சூழல் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டை விலையில் மாற்றமில்லை: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.3.60-ஆக நீடிக்கிறது. மற்ற மண்டலங்களைப் பொருத்தமட்டில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது(காசுகளில்) ஹைதராபாத்-345, விஜயவாடா-375, பாா்வாலா-347, ஹோஸ்பெட்-310, மைசூரு-350, சென்னை-365, மும்பை-385, பெங்களூரு-345, கொல்கத்தா-420, தில்லி-370-ஆக உள்ளது.
பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி கிலோ ரூ.103-ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ.75-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.