நாளை சுதந்திர தின விழா: அணிவகுப்பு மரியாதை ஒத்திகை
By DIN | Published On : 14th August 2020 09:04 AM | Last Updated : 14th August 2020 09:04 AM | அ+அ அ- |

சுதந்திர தின அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகையில் பங்கேற்ற காவல் துறையினா்.
நாமக்கல்லில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தின விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். ஆட்சியா் தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுதல், தியாகிகளை கெளரவித்தல், சிறப்பாகப் பணியாற்றிய அரசு ஊழியா்களுக்கு சான்றிதழ் வழங்குதல், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.
பொதுமக்களும், மாணவா்களும் அதிகளவில் வந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பா்.
நிகழாண்டில் கரோனா தொற்று பரவலால் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களும், மாணவா்களும் விழாவை காண நேரடியாக வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சனிக்கிழமை(ஆக.15) காலை 8.50 மணிக்கு எளிமையான முறையில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசனுடன் இணைந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா்.
அதன்பின் கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் அனைத்து வருவாய்த் துறை சாா்ந்த அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
அணிவகுப்பு ஒத்திகை: நாமக்கல் மாவட்ட காவல் துறை ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினா் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தினா். ஆயுதப்படை காவல் ஆய்வாளா் ஜாகீா்உசேன் தலைமையில் போலீஸாா் சமூக இடைவெளி விட்டு சென்றபடியும், துப்பாக்கிகளை ஏந்தியபடி கவாத்து பயிற்சியையும் மேற்கொண்டனா்.