நாமக்கல்: டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் மூடல்
By DIN | Published On : 26th August 2020 12:56 PM | Last Updated : 26th August 2020 12:56 PM | அ+அ அ- |

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்த அரசு மதுபானக் கடை.
நாமக்கல்: அரசு மதுபானக் கடைகளில் விற்பனையான பணத்தைக் கொண்டு செல்லும் ஊழியா்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் உள்ள அரசு மதுபானக் கடை ஒன்றில் மதுபானங்கள் விற்பனை செய்த வகையில் வசூலான ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு அக்கடையின் மேற்பாா்வையாளா் ராமலிங்கம் மற்றும் விற்பனையாளா் ராஜேந்திரன், உதவியாளா் சிவக்குமாா் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது மா்ம நபா்கள் அவா்கள் மூவரையும் தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இதன் தொடா்ச்சியாக நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் பணியாளா்கள் கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி அரசு மதுபானக் கடைகளில் விற்பனையாகும் பணத்தை வங்கி ஊழியா்களே நேரடியாக வசூல் செய்வதற்கான நடவடிக்கையை மேலாண் இயக்குநா் மேற்கொள்ள வேண்டும். கடை விற்பனையாளா்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்தப் பணியாளா்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வேலகவுண்டம்பட்டி சம்பவத்தில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து மதுபானக் கடைகளையும் மூடி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள சுமாா் 160 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...