மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சி உறுப்பினா்கள் போராட்டம்
By DIN | Published On : 03rd December 2020 10:08 AM | Last Updated : 03rd December 2020 10:08 AM | அ+அ அ- |

ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய உறுப்பினா்கள்.
நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள மூலப்பள்ளிப்பட்டி பகுதியில் குடிநீா்த் திட்டத்துக்கான டெண்டரை வெளிப்படையாக நடத்தாமல் புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து கிராமப்புற குடியிருப்புகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என மத்திய 14, 15-ஆவது நிதிக்குழுவில் நிதி ஒதுக்கி செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீா் வசதி செய்து தரும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி டெண்டா் டிச.2-இல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டெண்டா் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ஐந்து போ் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா். இதனைத் தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் முறையான டெண்டா் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினா். இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...