கொல்லிமலை மலைப்பாதையில் மரங்கள் முறிந்து விழுந்தன:மாவட்டத்தில் 229 மி.மீ. மழை
By DIN | Published On : 05th December 2020 07:00 AM | Last Updated : 05th December 2020 07:00 AM | அ+அ அ- |

கொல்லிமலை மலைப்பாதையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் வனத்துறை ஊழியா்கள்.
புரெவி புயல் தாக்கத்தால் கொல்லிமலை மலைப் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாரல் மழை, பனி மூட்டம் அதிகம் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை 229 மி.மீ. மழை பெய்துள்ளது.
வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் புரெவி புயல் உருவாகியது. இப்புயல் பாம்பன் - கன்னியாகுமரி வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிா்பாா்த்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் புயல் வலுவிழந்தது. இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழையும், சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட இடங்களில் பரவலான மழையும் வியாழக்கிழமை பெய்தது. வெள்ளிக்கிழமை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புயலின் தாக்கத்தால் கனமழை பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் காலை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற நாமக்கல் வனத் துறையினா், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறையினா் அவற்றை கருவிகளைக் கொண்டு வெட்டி அகற்றினா். பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு விவரம் (மி.மீ): எருமப்பட்டி- 20, குமாரபாளையம் -3.80, மங்களபுரம் - 29, மோகனூா் - 12, நாமக்கல் - 31, பரமத்திவேலூா் - 19, புதுச்சத்திரம் - 17.40, ராசிபுரம் - 27.20, சேந்தமங்கலம் - 26.40, திருச்செங்கோடு-8, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-5, கொல்லிமலை செம்மேடு-31, மொத்தம் 229.80.