விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மறியல்
By DIN | Published On : 05th December 2020 06:56 AM | Last Updated : 05th December 2020 06:56 AM | அ+அ அ- |

மெட்டாலா பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
விவசாய சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை மெட்டாலா பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயிகள் சங்க பொறுப்பாளா் பெருமாள் முன்னிலை வகித்தாா்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவா் சங்கம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் பி.பெருமாள், திமுக விவசாய அணி ஒன்றியச் செயலாளா் என்.அய்யாதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் செல்வராஜ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டச் செயலாளா் சதாசிவம், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சரவணன், தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவா் எஸ்.பெரியசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா், விவசாய சங்கத்தினரை காவல்துறையினா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைக்கப்பட்டனா்.