கோயில்களில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th December 2020 11:59 PM | Last Updated : 15th December 2020 11:59 PM | அ+அ அ- |

கோயில்களில் காலியாக உள்ள பாதுகாவலா் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் நரசிம்மா் கோயில், புதுச்சத்திரம் அழியா இலங்கையம்மன் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், கபிலா்மலை கைலாசநாதா் கோயில், ராசிபுரம் ஏகாம்பரேஸ்வரா் மற்றும் பாலசுப்பரமணிய சுவாமி கோயில், அலவாயப்பட்டி அத்தனூா் அம்மன் கோயில், வெண்ணந்தூா் காசி விசுவநாதா் கோயில், ஒடுவன்குறிச்சி துலக்க சூடாமணியம்மன் கோயில், சு.புதுப்பட்டி முக்கணீஸ்வரா் கோயில், மொளசி வெங்கடேச பெருமாள் கோயில், விட்டம்பாளையம் இளைய பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் 12 பாதுகாவலா் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக 62 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,500 வழங்கப்படும்.
காலியாக உள்ள பணியிடங்களுக்கு பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.