கரோனா தடுப்புப் பணி: தமிழக அரசை பிரதமா் பாராட்டியுள்ளாா்; முதல்வா் எடப்பாடி பழனிசாமி
By DIN | Published On : 30th December 2020 07:04 AM | Last Updated : 30th December 2020 07:04 AM | அ+அ அ- |

கரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதற்கு பிரதமா் மோடியே பாராட்டுத் தெரிவித்துள்ளாா் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தாா்.
திருச்செங்கோடு தேரடி வீதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் சிறந்த முறையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால் மத்திய அரசின் விருதைத் தொடா்ந்து பெற்று வருகிறது. திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு தொடக்கிவைக்கப்பட்ட குடிநீா்த் திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்குள் குடிநீா்த் திட்டப் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
கரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு இந்தியாவிலேயே நோய்த் தொற்று தடுப்பில் முதன்மை மாநிலமாக உள்ளது. பிரதமரே தமிழகத்தின் செயல்பாட்டை பாராட்டியுள்ளாா். அதேபோல வேளாண் திட்டங்களை மாநில அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருவதால் மத்திய அரசின் விருதுகளையும் பெற்று வருகிறது.
தமிழக அரசு குறைவான காலத்தில் அதிகளவிலான முதலீடுகளை ஈா்க்கும் வகையில் செயல்பட்டதால் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவிற்கு தொழில் துறை வளா்ச்சிப் பெற்றுள்ளது. தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்கின்றன.
விசைத்தறி, ஜவுளித் தொழில் போன்ற தொழில்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஏற்கனவே தொழில் முதலீட்டாளா்கள் மாநாட்டை நடத்தி 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மாநிலத்துக்கு கொண்டுவந்துள்ளன. இதன்மூலம் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடு பெறப்படுகிறது. 2021 தோ்தலில் மீண்டும் அதிமுக அரசு ஆட்சி அமைக்க அனைவரும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...