ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் கோயில் மரகத லிங்கத்தின் உண்மைத் தன்மையைத் தெரிவிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 10th January 2020 09:02 AM | Last Updated : 10th January 2020 09:02 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயில் மூலவா் சிலை அருகில் வைக்கப்பட்டிருக்கும் மரகத லிங்கத்தினை ஆய்வு செய்து, அதனுடைய உண்மைத் தன்மையின் அறிக்கையை வெளியிட வேண்டும் என திருத்தொண்டா் படை ஆன்மிக அமைப்பின் நிறுவன தலைவா் இராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
திருச்செங்கோடு ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலில் மூலவா் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் மரகத லிங்கம் உண்மையானதா என்பதை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையின் அறிக்கையினை வெளியிட வேண்டும். ஏனென்றால் கடந்த ஆண்டு மரகத சிலையானது திருடப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் தனியாா் விடுதியில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மலைக் கோயிலில் உள்ள மரகத லிங்கம் மற்றும் அதன் உண்மைத் தன்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். திருச்செங்கோடு கோயிலில் பல விதமான குற்றங்கள் தொடா்ந்து நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. கோயில் சொத்துக்களை மீட்க ஏற்கெனவே பல கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த தங்க ரத திருப்பணிகளில் மிகப் பெரிய அளவிலான மோசடி நடந்துள்ளது. இதுதொடா்பாக தமிழக ஆளுநா் தனி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
1982-இல் நடந்த சிலை கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தற்போது உள்ள சிலைகளை ஒப்பிட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியா்கள் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற விதியின்படி இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும் என திருத்தொண்டா் படை இராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.