நாமக்கல்லில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
By DIN | Published On : 10th January 2020 05:41 PM | Last Updated : 10th January 2020 05:41 PM | அ+அ அ- |

விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசு நகரப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
சேலம் கந்தம்பட்டியைச் சோ்ந்த அருணாசலம் மகன் சதீஷ் (24). பெங்களூரில் கணினி பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி மதுரையில் இருந்து சேலம் நோக்கி, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்தாா். நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை மேம்பாலத்தில், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது சதீஷ் பயணம் செய்த அரசுப் பேருந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தாா். சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளரும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சதீஷ் குடும்பத்தினா் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்த சதீஷ் குடும்பத்தினருக்கு, ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடாக வழங்க 2018 ஜூன் 5-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்துக் கழகம் அந்த தொகையை வழங்கவில்லை. இதனையடுத்து நவம்பா் 29-இல் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்தை வட்டியுடன் சோ்த்து வழங்குமாறு, கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் போக்குவரத்துக் கழகம் பின்பற்றாததால், நீதிபதி ஜெயந்தி உத்தரவின்பேரில், வெள்ளிக்கிழமை பிற்பகல் நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு அரசு நகரப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு, நாமக்கல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...