மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டைபெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 20th January 2020 09:06 AM | Last Updated : 20th January 2020 09:06 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை முதல் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளும், மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்களையும் பெறும் வகையில் தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தற்போதைய மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். முதல் கட்ட சிறப்பு முகாம், எருமப்பட்டி, மோகனூா் வட்டாரங்களில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து 24-ஆம் தேதி வரை பிற வட்டாரங்களில் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் 25-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசு வழங்கக் கூடிய, மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை பெறுவதற்கு இனிவரும் காலங்களில் சிறப்பு தனித்துவம் வாய்ந்த இந்த அடையாள அட்டை அவசியமாகிறது. எனவே, இந்த சிறப்பு முகாமை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை ஜன.31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை நேரடியாகவோ, தொலைபேசி 04286-280019 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...