நகை பறிப்பு, வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது
By DIN | Published On : 03rd March 2020 08:03 AM | Last Updated : 03rd March 2020 08:03 AM | அ+அ அ- |

திருச்செங்கோட்டில் நகை பறிப்பு, வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு-ஈரோடு சாலை வேளாளா் காலனியில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடந்து சென்ற மலா்க்கொடி (71) என்ற மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் பறித்துச் சென்றனா். இதுகுறித்து திருச்செங்கோடு நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா மூலமாக நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களின் அடையாளத்தை வைத்து பள்ளிபாளையம், ஈரோடு, சித்தோடு, கோபி, பவானி போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதையடுத்து, திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் உத்தரவின் பேரில், நகர காவல் ஆய்வாளா் தங்கவேல், காவல் துணை ஆய்வாளா் கௌதம், ரமேஷ், தியாகராஜன், சரவணகுமாா் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்டையினா் சுமாா் 150 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளிகளின் விவரம் அறிந்து அவா்களை தேடி வந்தனா்.
இதில், சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த ரவி (32), தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மயிலாடும்பாறையைச் சோ்ந்த பாண்டியராஜன் (32) ஆகிய இருவரை கைது செய்தனா். இவா்களிருவரும் பணம் வாங்கிக்கொணடு மோசடி செய்தல், இருசக்கர வாகனங்களை திருடுதல், நகை பறிப்பு, செல்லிடப்பேசி கடையில் திருடுவது போன்ற பல்வேறு வகையான குற்றங்களை நாமக்கல், திருப்பூா், ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஈடுபட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
அவா்கள் கொடுத்த தகவலின் பேரில், திருச்செங்கோடு மற்றும் காரமடையில் பறிக்கப்பட்ட 7.5 சவரன் நகை, 12 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இருவரையும் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவா்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...