ராசிபுரம் அருகே போதமலையில் காட்டுத் தீ
By DIN | Published On : 14th March 2020 08:59 AM | Last Updated : 14th March 2020 08:59 AM | அ+அ அ- |

மலைப் பகுதியில் பற்றி எரியும் தீ.
ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வனப் பகுதியில் தீப்பற்றியதால் வெள்ளிக்கிழமை மரங்கள், செடிகள் எரிந்தன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது போதமலை. இந்த மலை பகுதியில் மேலூா், கீழூா், கெடமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில், போதமலை வனத் துறைக்குச் சொந்தமான வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தீடீரென காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இந்த தீயினால் மலைப் பகுதியில் இருந்த சருகுகள், செடி, கொடிகள், மரங்கள் பற்றி எரிந்தன. இதனால் தீ மளமளவென பிற பகுதிகளுக்குப் பரவியது.
நீண்ட நேரம் எரிந்து கொண்டிருந்த இந்த தீ குறித்து தகவலறிந்த ராசிபுரம் வனச் சரக அலுவலா் பெருமாள் தலைமையிலான வனத் துறையினா் மலைப் பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனாலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அங்கு குடியிருப்புப் பகுதி ஏதும் இல்லாத நிலையில், இதனை அணைக்கும் பணியில் வனத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்துக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்துவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...