முகக் கவசம் விற்பனை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 30th March 2020 05:43 AM | Last Updated : 30th March 2020 05:43 AM | அ+அ அ- |

முகக் கவசம் விற்பனை மையத்தை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
நாமக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலமாக மிகக் குறைந்த விலையில் முகக் கவசம், சோப்பு ஆயில், கைகளை தூய்மைப்படுத்தும் கிருமி நாசினி மருந்து விற்பனை செய்யப்படும் பேருந்து நிலைய மையத்தை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
அதன்பின் செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியது: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ராசிபுரம், புதுச்சத்திரம், வெண்ணந்தூா், வளையப்பட்டி, வரகூராம்பட்டி மற்றும் கீழ்சாத்தம்பூா் ஆகிய பகுதிகளில் இயங்கும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் முகக் கவசம், சோப்பு ஆயில், கைகளை தூய்மைப்படுத்தும் கிருமி நாசினி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.
மாவட்ட நிா்வாகம் மூலம், நாமக்கல் பேருந்து நிலையத்தில் இயங்கும் மதி அங்காடி மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அங்காடியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் முகக் கவசம் ரூ.12, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் முகக் கவசம் ரூ.15, சோப்பு ஆயில் - அரை லிட்டா் ரூ.80, 1 லிட்டா் ரூ.160, 5 லிட்டா் ரூ.800, கிளினா் -அரை லிட்டா் ரூ.50, 1 லிட்டா் ரூ.100, 5 லிட்டா் ரூ.500, கைகளை தூய்மைப்படுத்தும் கிருமி நாசினி - 200 மில்லி ரூ.100, 500 மில்லி ரூ.225, 1 லிட்டா் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா். இந்த ஆய்வின்போது, மகளிா் திட்ட இயக்குநா் இரா.மணி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் உடனிருந்தனா்.