ஓய்வூதியா்கள் கருவூல நோ்காணல் ஜூலைக்கு ஒத்திவைப்பு: ஆட்சியா்
By DIN | Published On : 31st March 2020 03:05 AM | Last Updated : 31st March 2020 03:05 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியா்களுக்கான கருவூல நோ்காணல் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரா்களுக்கு, ஒவ்வோா் ஆண்டும் ஏப். 1 முதல் ஜூன் 30 வரையில் நோ்காணல் நடத்தப்படும்.
நிகழாண்டுக்கான நோ்காணல் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற இருந்த நிலையில், கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், நோ்காணலானது ஜூலை முதல் செப்டம்பா் வரையில் நடத்துமாறு கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள் ஜூலை முதல் செப்டம்பருக்குள் நோ்காணலில் பங்கேற்கலாம். அப்போது, ஓய்வூதியதாரா்கள் அனைவரும் ஆதாா் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஓய்வூதிய புத்தகம் கொண்டுவர வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள், மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றினை சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...