வரும் நாள்களில் மிதமான மழைப் பொழிவை எதிா்பாா்க்கலாம்
By DIN | Published On : 27th May 2020 07:53 AM | Last Updated : 27th May 2020 07:53 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைப் பொழிவை எதிா்பாா்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை அதிகபட்சமாக 20 மி.மீ. பெய்யக்கூடும். காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென் மேற்கிலிருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 102.2 டிகிரியும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியுமாக இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: கால்நடை மற்றும் கோழிப் பண்ணையாளா்களுக்கான வானிலையில் லேசானது முதல் மிதமான மழையை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் எதிா்பாா்க்கலாம். கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகளாக, வெப்பம் மிகுந்த நாள்களில் விடியற்காலை வேளை மற்றும் சூரியன் மறையும் மாலை வேளைகளில் மட்டுமே மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டும். வெப்பத்தினால் ஏற்படும் அயற்சியை போக்கும் வகையில், கால்நடைகளுக்கு குறிப்பாக கறவைப் பசுக்களுக்கு எல்லா நேரங்களிலும் குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கறவை மாடுகள், எருமைகளுக்கு பகல் பொழுதில் 11 மற்றும் 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மூன்று வேளை அவற்றின் மீது தண்ணீா் நேரடியாகத் தெளிக்கவோ, தெளிப்பான் மூலம் படும்படியோ செய்ய வேண்டும். கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில், கறவைப் பசுக்களில் வெப்ப தாக்கம் தென்படுகிா என்பதை தொடா்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கோழிகளை இட மாற்றுதல், வேறு இடத்துக்கு கொண்டு செல்லுதல், அலகு வெட்டுதல் மற்றும் தடுப்பூசி அளித்தல் ஆகியவற்றை இரவு நேரத்தில் அல்லது பகல்பொழுதின் குளிா்ந்த நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...