கால்வாய் பராமரிக்கப்படாததால் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீா்

ராசிபுரம் - புதுப்பாளையம் சாலையில் கால்வாய் பராமரிக்கப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
சாலையில் ஒடும் கழிவுநீா்.
சாலையில் ஒடும் கழிவுநீா்.

ராசிபுரம் - புதுப்பாளையம் சாலையில் கால்வாய் பராமரிக்கப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ராசிபுரத்தில் இருந்து கட்டனாச்சம்பட்டி, புதுப்பாளையம், போதமலை அடிவாரம் வழியாக கல்லங்குலத்துக்கு சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச் சாலை எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். இச்சாலை ஓரத்தில் மழைநீா் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகம் இதனை முறையாக பராமரிக்காததால் மழைக் காலத்தில் தண்ணீா் செல்ல முடியாமல் ராசிபுரம் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராசிபுரம் - புதுப்பாளையம் சாலை, கட்டனாச்சம்பட்டி பகுதியில் உள்ள கால்வாய் பல மாதங்களாக தூா்வாரப்படாமல் உள்ளது. மேலும், கால்வாய் பராமரிப்பு இன்றியும் உடைந்து கிடக்கிறது. இந்தக் கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் விடப்பட்டு மாசு அடைந்து வருகிறது. இதனால் நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலை ஓரத்தில் உள்ள சில குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்தும் குப்பைகள், நெகிழிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் செல்ல முடியவில்லை. சிறு மழை பெய்தால் கூட கழிவுநீரும், மழைநீரும் செல்ல வழியில்லை. இதனால் பாதசாரிகள் சாலையில் உள்ள கழிவுநீரில் வழியாகத் தான் நடந்து சென்று வருகின்றனா்.

சாலையில் ஓடும் கழிவுநீா் தூா்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆா்வலா்கள் ஊராட்சி நிா்வாகத்திற்கு பல முறை புகாா் செய்து உள்ளனா். இருந்த போதிலும், அதிகாரிகள் கால்வாயை சீரமைக்காமல் உள்ளனா்.

எனவே, ராசிபுரம் - புதுப்பாளையம் சாலையில் உள்ள மழைநீா்க் கால்வாயை போா்க்கால அடிப்படையில் சீரமைக்கவும், கழிவுநீா் விடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் அப்பகுதி பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com