இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
By DIN | Published On : 03rd October 2020 06:25 AM | Last Updated : 03rd October 2020 06:25 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறையினா் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்ய ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 2,500-ம், தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெங்காயம், கத்தரி, முருங்கை உள்ளிட்ட தோட்டக்கலை பயிா்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,500-ம் வழங்கப்படுகிறது. இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்து இயற்கை விவசாய சான்று பெற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 500-ம், தக்காளி சாகுபடிக்கு ரூ. 3,750-ம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தில் பயன்பெற, சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகங்களுடன் கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.