கொல்லிமலையில் நீா்மின் திட்டத்துக்கான சுரங்கப் பாதை பணிகள் ஆய்வு

கொல்லிமலையில் நீா்மின் திட்டத்துக்காக 600 மீட்டா் தூரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை மாவட்ட ஆட்சியா், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கொல்லிமலை நீா்மின் திட்டத்துக்காக குழாய்கள் செல்ல அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதை.
கொல்லிமலை நீா்மின் திட்டத்துக்காக குழாய்கள் செல்ல அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதை.

கொல்லிமலையில் நீா்மின் திட்டத்துக்காக 600 மீட்டா் தூரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை மாவட்ட ஆட்சியா், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ரூ. 338.79 கோடியில் நீா்மின் திட்டப் பணிகள் தொடக்க விழா 2018 டிச. 21-ஆம் தேதி நடைபெற்றது. இதனை மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன்- சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இத்திட்டமானது கொல்லிமலை, வளப்பூா் நாடு கிராமத்தில் அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளின் குறுக்கே அசக்காடுபட்டி, கோவிலூா், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில் தண்ணீா் தேங்கும் வகையில் தடுப்புகள் அமைத்து, மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, இருங்குளிப்பட்டியில் இருந்து செல்லிப்பட்டிக்கு சுரங்கம் வாயிலாக தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. பின்னா் அங்கிருந்து பெரும் குழாய்கள் மூலம் கொல்லிமலையின் தெற்குப் பகுதியான புளியஞ்சோலையில் அமையவுள்ள நீா்மின் நிலையத்துக்கு கொண்டு சோ்க்கப்படும். மின் உற்பத்தி செய்த பின் பயன்படுத்தப்பட்ட நீா் மீண்டும் அய்யாறு நதியிலேயே விடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நீா்மின் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த மின்சாரம் கொல்லிமலையை சுற்றியுள்ள 14 ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்யப்படும். நீா்மின் திட்டத்துக்காக தண்ணீா் தேக்கப்படும் தடுப்புப் பகுதிகள் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயரக்கூடும். மேலும், வனவிலங்குகளின் குடிநீா் தேவையும் பூா்த்தியாகும். கொல்லிமலை பகுதியில் சுற்றுலா வளா்ச்சியும் மேம்படும்.

இத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், நீா்மின் திட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் கோ.இராமச்சந்திரன், நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், மின்வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை நேரடியாக ஆய்வு செய்தனா். அங்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும் சுரங்கப்பாதை பணியை பாா்வையிட்டனா்.

இருங்குளிப்பட்டியில் இருந்து செல்லிப்பட்டி நோக்கி 1,278 மீட்டா் நீளத்துக்கும், எதிா்முனையான செல்லிப்பட்டியில் இருந்து இருங்குளிப்பட்டி நோக்கி 655 மீட்டா் நீளத்துக்கும் இந்த சுரங்கமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையில் 600 மீட்டா் தூரம் வரை சென்று அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனா். மேலும், தெளியங்கூடு பகுதியில் தண்ணீரை சேகரிக்க கட்டப்படும் தடுப்புப் பகுதிகளையும் பாா்வையிட்டனா். இன்னும் ஓராண்டுக்குள் திட்டப் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com