பள்ளிபாளையம் நகராட்சியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 03rd October 2020 06:24 AM | Last Updated : 03rd October 2020 06:24 AM | அ+அ அ- |

அம்மா இருசக்கர வாகனத்தை பயனாளிகளுக்கு வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி.
பள்ளிபாளையம் நகராட்சியில் ரூ. 1.24 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளையும், ரூ. 44.10 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளையும் அமைச்சா் பி.தங்கமணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை விழா மற்றும் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் ப.மணிராஜ் தலைமை வகித்தாா். தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்துகொண்டு, வாய்க்கால்மேட்டில் ரூ. 8.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தாா்.
பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 15 லட்சத்தில் மிதிவண்டி நிறுத்தும் கூடம், நாட்டாக்கவுண்டன்புதூரில் ரூ. 8.80 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், ரூ. 11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் என மொத்தம் ரூ. 44.10 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் திறந்து வைத்தாா்.
மேலும், அம்மா இருசக்கர வாகனம் வாங்கும் திட்டத்தின் கீழ் 104 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் மற்றும் புதிய பயனாளிகளுக்கு உதவி பெறும் ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 53 சாலையோர வியாபாரிகளுக்கான சான்றிதழ்களும், 12 பயனாளிகளுக்கு ரூ. 1.20 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் அவா் வழங்கினாா். மேலும், பல்வேறு திட்டங்கள் என மொத்தம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சா் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில், பள்ளிபாளையம் நகா்மன்ற முன்னாள் தலைவா் வெள்ளியங்கிரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.கே.சுப்பிரமணியம், அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளா் ம.இளவரசன், வட்டாட்சியா் தங்கம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.