போலிச் சான்றிதழ் விவகாரம்: ஆஞ்சநேயா் கோயில் ஊழியா் பணி நீக்கம்
By DIN | Published On : 03rd October 2020 06:24 AM | Last Updated : 03rd October 2020 06:24 AM | அ+அ அ- |

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் தலைமைக் கணக்கா் வியாழக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் தலைமைக் கணக்கராக பணியாற்றி வந்த பெரியசாமி (54), பத்தாம் வகுப்பு வரை முடித்த நிலையில், பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்ாக போலிச் சான்றிதழை சமா்ப்பித்து பணியில் சோ்ந்ததாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் கடைநிலை ஊழியராக இருந்த அவா், பின்னா் பதவி உயா்வு மூலம் தலைமைக் கணக்கா் நிலைக்கு உயா்ந்தாா்.
சில மாதங்களுக்கு முன் அவா் போலிச் சான்றிதழ் வழங்கியது தொடா்பான தகவல் கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, பெரியசாமியின் பணிப்பதிவேட்டினை ஆய்வு செய்த போது, அதில் பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ் நகல் கிழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பெரியசாமி பதவி இறக்கம் செய்யப்பட்டு, நரசிம்மா் கோயிலில் தரிசனச் சீட்டு வழங்கும் பணியில் அமா்த்தப்பட்டாா். அதன்பின் புகாா் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதற்கிடையே, அரசுத் தோ்வுகள் இயக்குநரகத்துக்கு கோயில் உதவி ஆணையா் கடிதம் எழுதி, பெரியசாமியின் பிளஸ் 2 சான்றிதழ் குறித்து விசாரித்ததில், அது போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து வியாழக்கிழமை பெரியசாமி பணியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டாா்.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியது:
போலி பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ் கொடுத்து பெரியசாமி பணியில் சோ்ந்துள்ளாா். இதுகுறித்து தெரியவந்ததையடுத்து அவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்றாா்.