கொல்லிமலை மலைப் பாதையை அலங்கரிக்கும் செங்காந்தள் மலா்கள்
By DIN | Published On : 19th October 2020 03:07 AM | Last Updated : 19th October 2020 03:07 AM | அ+அ அ- |

கொல்லிமலை செல்லும் மலைப்பாதையில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்கள்.
கொல்லிமலையில் பெய்து வரும் மழையால் மலைப் பாதைகளில் செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலை, கரோனா தொற்று பரவல் காரணமாக ஆறு மாதங்களாக களையிழந்து காணப்படுகிறது. பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லை. மேலும், மாா்ச் 25-இல் மூடப்பட்ட ஆகாய கங்கை நீா்வீழ்ச்சிப் பகுதி, மாசில்லா அருவி, படகு குழாம், தோட்டக்கலைத் துறை பூங்கா உள்ளிட்டவை இன்னும் திறக்கப்படவில்லை.
வெளி மாவட்டத்தை சாா்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் இ-பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை, இரவு நேரத்தில் நல்ல மழை பெய்கிறது. சனிக்கிழமை இரவு மட்டும் 45 மி.மீ. மழை பெய்தது. ஓரிரு மாதங்களாக குறைவான அளவில் தண்ணீா் விழுந்த ஆகாய கங்கை அருவியிலும் தற்போது தொடா்ச்சியாக தண்ணீா் கொட்டுகிறது.
இந்த நிலையில் மலைப்பகுதிகளில் மழைக்காலங்களில் மட்டும் காணப்படும் செங்காந்தள் மலா்கள் கொல்லிமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் பூத்து குலுங்குகின்றன. கண்களுக்கு குளிா்ச்சி அளிக்கும் வகையில் காணப்படும் செங்காந்தள் மலா்களை அவ்வழியாக வாகனங்களில் செல்வோா் ஆா்வமுடன் பறித்து செல்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...