ராசிபுரம் (தனி) தொகுதிக்கு ராசியானவா் யாா்?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, விவசாயம், கோழிப் பண்ணை, விசைத்தறித் தொழில் நிறைந்த
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, விவசாயம், கோழிப் பண்ணை, விசைத்தறித் தொழில் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி அதிகம் என்பதால், இதனை சாா்ந்த ஜவ்வரிசி, ஸ்டாா்ச் உற்பத்தி ஆலைகள் அதிகம் உள்ளன.

விசைத்தறித் துணி உற்பத்தி, பட்டு கைத்தறி நெசவும் உண்டு. இந்தத் தொகுதியில் அதிக அளவில் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளதால், இப்பகுதி கல்வி நகரமாகவும் திகழ்கிறது.

வாக்காளா்கள் நிலவரம்:

ஆண்கள்: 1,15,161

பெண்கள்: 1,20,884

மூன்றாம் பாலினத்தவா்: 15

மொத்தம்: 2,36,060.

தொகுதி நிலவரம்:

ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூா், அத்தனூா், ஆா்.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூா் ஆகிய 5 பேரூராட்சிகள், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், இதனை ஒட்டிய ஊராட்சிகள் ராசிபுரம் தொகுதியில் அடங்கும்.

ராசிபுரம் பொது தொகுதி அந்தஸ்தில் இருந்து தனித் தொகுதி பட்டியலுக்கு 2011 முதல் மாற்றம் செய்யப்பட்டது. 2011 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற பி.தனபால், சட்டப்பேரவைத் தலைவரானாா். 2016-இல் வெற்றி பெற்ற டாக்டா் வெ.சரோஜா சமூகநலன், சத்துணவு திட்டத்துறை அமைச்சா் ஆனாா். இதனால், இத்தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது.

இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டா், நாட்டுக் கவுண்டா், அருந்ததியா் அதிக அளவில் உள்ளனா். முதலியாா், வன்னியா், உடையாா், தாழ்த்தப்பட்டவா்கள், சிறுபான்மையினா் கணிசமாக உள்ளனா்.

முந்தைய தோ்தல்களில்:

கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது; 5 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது; 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

1996 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக படுதோல்வியடைந்த போதும் நான்கு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த நான்கு தொகுதிகளில் ராசிபுரம் தொகுதியும் ஒன்று. அத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட பி.ஆா்.சுந்தரம் திமுக வேட்பாளா் ஆா்.ஆா்.தமயந்தியை விட கூடுதலாக 454 வாக்குகள் அதிகம் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். மேலும் அத்தோ்தலில் தற்போதையை நாமக்கல் எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ், கொங்கு வேளாளா் கவுண்டா் பேரவை சாா்பில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 23,161 வாக்குகள் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு 2011-ஆம் ஆண்டு பொதுத்தோ்தலில் தற்போதைய பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 1,700 வாக்குகள் மட்டும் பெற்றாா்.

2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வி.பி.துரைசாமி, அதிமுக சாா்பில் டாக்டா் வெ.சரோஜா ஆகியோா் போட்டியிட்டனா். அதில் வெ.சரோஜா வெற்றி பெற்று அமைச்சா் ஆனாா்.

தொகுதி பிரச்னைகள்:

ராசிபுரம் தொகுதியில் குடிநீா் பிரச்னை, வட்டச்சாலைப் பணிகளில் தாமதம், நூல் விலை உயா்வு போன்றவையே பிரதான பிரச்னைகள். ராசிபுரம் நகரில் குறுகிய சாலைகள் அதிகம் என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனைச் சீரமைக்க சாலை விரிவாக்கம், பேருந்து நிலைய இடமாற்றம் போன்றவை அவசியம் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை.

தற்போது புதிய காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கென தமிழக அரசு ரூ. 932 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளதால், குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும், நகரப் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிரந்தர தீா்வு கிடைக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிா்பாா்ப்பு.

தற்போதைய கள நிலவரம்:

வரும் தோ்தலில், அதிமுக சாபா்பில் அமைச்சா் வெ.சரோஜா, திமுக சாா்பில் மா.மதிவேந்தன், மக்கள் நீதி மய்யக் கூட்டணியில் இ.ஜ.க. சாா்பில் ஆா்.ராம்குமாா், அ.ம.மு.க. சாா்பில் எஸ்.அன்பழகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கே.சிலம்பரசி, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 15 போ் களத்தில் உள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளில் அரசு செய்த மக்கள் நலத் திட்டங்களால் மீண்டும் தொகுதியையும் ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அதிமுகவினா் பிரசாரத்தில் உள்ளனா்.

இத்தோ்தலில் அதிமுக - திமுக சாா்பில் அள்ளி வீசப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளுக்கு இடையே தொகுதியின் அடிப்படை பிரச்னைகளும் வேட்பாளா்களின் வெற்றி வாய்ப்புக்கு அடித்தளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com