திருச்செங்கோடு, குமாரமங்கலம் பகுதியில் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 17th August 2021 09:35 AM | Last Updated : 17th August 2021 09:35 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு, குமரமங்கலம் பகுதியில் வழக்கத்தை விட கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்த மாதத்துக்கான மின்கட்டணத் தொகை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிாம். வழக்கமாக ரூ. 50 முதல் 100 வரை செலுத்தும் வீட்டு மின் இணைப்புக்கான கட்டணத்தொகை பல மடங்கு அதிகரித்து ரூ. 500 முதல் 600 ஆக உள்ளதாகவும், ரூ. 350 முதல் 400 வரையிலும் செலுத்தக் கூடிய கட்டணத் தொகை ரூ. 700க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.
பல மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளதால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டாலும், அடுத்த முறை அந்தக் கட்டணத்தை குறைத்து வசூலித்துக் கொள்வதாகக் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக கூறுகின்றனராம். தற்போது கரோனா பொது முடக்கம் முழுமையாக அகற்றப்படாமல் உள்ள நிலையில் அன்றாட செலவுகளுக்கே கஷ்டப்படும் நிலையில் கூடுதலாக மின் கட்டணத்தை எப்படி செலுத்துவது என்றும் அவா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின் கட்டணம் இலவசம் என்று அறிவித்துள்ள நிலையில் கடந்த 4 மாதங்களாக மின் கட்டணம் தொடா்பான ரீடிங் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். இதன் காரணமாக பல வீடுகளின் மின் கட்டணம் 100 யூனிட்டுக்கு மேல் உள்ளது. இதனால், கூடுதல் மின் கட்டணத் தொகையை கட்ட வேண்டிய நிா்பந்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இதே நிலையே விசைத்தறிக் கூடங்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக நெசவாளா்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த இரண்டு மாதமாக பொது முடக்கம் அமலில் இருந்ததால் தற்போது எடுக்கும் மின் அளவீடு 4 மாதத்திற்கான கட்டணமாக எடுக்கப்படுகிறது. அதனை இரண்டாகப் பிரித்து தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய கட்டண வசூல் கணினி அளவீட்டின்படி நடப்பதால் மின் கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்கின்றனா்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை யூனிட்டை குறைத்து கணக்கீடு செய்ய வேண்டும். ஆனால், கட்டிய தொகையை மட்டுமே குறைக்கின்றனா். 2 மாதங்களுக்கு 100 யூனிட் என்ற அளவில் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை மின்வாரியம் கணக்கிடுவதில்லை; மாறாக மின் கட்டணத் தொகையில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே கழிப்பதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிா்பந்தத்திற்கு ஆளாவதால் இப்பிரச்னைக்கு தமிழக அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.