பயிா்க் கடன் தள்ளுபடியில் குளறுபடி: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 09:33 AM | Last Updated : 17th August 2021 09:33 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், அதிமுக ஆட்சியில் அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடியில் நிகழ்ந்த குளறுபடிகளைக் களைந்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதியன்று தொடக்க வேளாண் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளுக்கு கடன் கொடுக்க பணம் இல்லாததால் ஆவணங்களை மட்டும் பதிவு செய்து கொண்டு கடனில் ஒரு பகுதியாக உரத்தை மட்டுமே வழங்கி உள்ளனா்.
கரோனா தொற்று காலத்தில், விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவற்றால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.