நாமக்கல் மாவட்டத்தில் 513 முகாம்களில் 13-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 04th December 2021 11:28 PM | Last Updated : 04th December 2021 11:28 PM | அ+அ அ- |

எஸ்.நாட்டாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 13-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 12 மாபெரும் தடுப்பூசி முகாம்களில், 4,74,471 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். 13-ஆம் கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 472 முகாம்கள், 41 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 513 முகாம்களில் கரோனா ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடைபெற்றது. இம்முகாம் பணிகளில் 210 மருத்துவா்கள், 430 செவிலியா்கள், 1,600 அங்கன்வாடி பணியாளா்கள், 1,400 தன்னாா்வலா்கள், 415 பயிற்சி செவிலியா்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள், 1,400 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
மேலும், இந்த மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்துகொள்வதற்காக தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் மூலமாக முதியோா்கள், இளைஞா்கள், வணிகா்கள் தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை உணா்த்தும் குறும்படங்கள், செய்திகள் வெளியிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த நிகழ்வின் போது, புதுச்சத்திரம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், வனிதா உள்பட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...