வரும் ஜனவரி மாதம் முதல் காய்கறிகள் விலை குறையத் தொடங்கும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
நாமக்கல்லில் நகர தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் நகராட்சியில் உள்ள தினசரி காய்கறி சந்தை 12 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. இதனை தரம் உயா்த்தி புதிய கட்டடங்கள் கட்டித் தர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இம்மாத இறுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆயத்த ஆடைகள் மீதான ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயா்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து விரைவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம். கரோனா காலத்தில் 142 வியாபாரிகள் உயிரிழந்துள்ளனா். அவா்களது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஆந்திரம், கா்நாடகத்தில் பெய்த கன மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து போனது. சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்டும், வாடகை, ஆள்கள் கூலி உள்ளிட்ட பல்வேறு செலவினங்களால் விலை உயா்ந்தது. வரும் ஜனவரி மாதம் முதல் காய்கறிகள் வரத்து அதிகரிப்பதால் விலை குறையத் தொடங்கும். இதனைத் தவிா்க்க முக்கிய இடங்களில் குளிா்பதனக் கிடங்கு அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
பொலிவுறு நகரம் திட்டத்துக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான காய்கறி கடைகள் இடிக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை கட்டித் தரவேண்டும். மேலும், அதற்கான வாடகையை குறைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைப்போம் என்றாா்.
இந்தப் பேட்டியின் போது, நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், முன்னாள் தலைவா் பெரியசாமி, தினசரி காய்கறி சந்தை தலைவா் மனோகரன், நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.