கோமாரி நோயால் பசு மாடு பலியானதாகப் புகாா்: நாமக்கல் கால்நடைத் துறை அதிகாரிகள் விளக்கம்

திருச்செங்கோடு அருகே கோமாரி நோய் தாக்கி பசு மாடு பலியானதாக எழுந்த புகாரையடுத்து, பிரேதப் பரிசோதனை செய்ததில் தீவனப் பையில் அடைப்பு ஏற்பட்டு மாடு உயிரிழந்தது தெரியவந்தது.

திருச்செங்கோடு அருகே கோமாரி நோய் தாக்கி பசு மாடு பலியானதாக எழுந்த புகாரையடுத்து, பிரேதப் பரிசோதனை செய்ததில் தீவனப் பையில் அடைப்பு ஏற்பட்டு மாடு உயிரிழந்தது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் பசு, காளை, எருமை மாடுகள் 3.32 லட்சம் எண்ணிக்கையில் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். நவம்பா், டிசம்பா் மாதங்களில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கக் கூடும். மேலும், கோமாரி நோயின் தாக்கமும் இம்மாதங்களில் அதிகரித்து காணப்படும். தற்போது அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை கால்நடைத் துறை மருத்துவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியில், செந்தில்குமாா் என்ற விவசாயிக்கு சொந்தமான பசு மாடு ஒன்று திடீரென வாயில் நுரை தள்ளியபடி வியாழக்கிழமை உயிரிழந்தது. கோமாரி நோய் தாக்கி தனது மாடு இறந்து விட்டதாகவும், கால்நடை மருத்துவா்கள் யாரும் பரிசோதனை செய்ய வரவில்லை எனவும் அவா் குற்றம் சாட்டினாா். இதனைத் தொடா்ந்து, கால்நடைத் துறை இணை இயக்குநா் வி.பி.பொன்னுவேல் உத்தரவின் பேரில், மருத்துவா்கள் அங்கு நேரில் சென்று விசாரணை செய்தனா். மேலும், இறந்த பசு மாட்டை பிரேதப் பரிசோதனை செய்தனா்.

அதில், தீவனப் பையில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதிக அளவில் தீவனத்தை மாடு உள்கொண்டதால் அஜீரணமாகி இறந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. கோமாரி நோய் பாதிப்பால் அந்த மாடு பலியாகவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனா்.

இதுகுறித்து நாமக்கல் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குநா் வி.பி.பொன்னுவேல் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் எந்த கால்நடையும் கோமாரி நோயால் இறக்கவில்லை. திருச்செங்கோட்டில் மாடு இறப்பு சம்பவம் தீவனப் பையில் ஏற்பட்ட அடைப்பால் நிகழ்ந்துள்ளது. கோமாரி நோயைத் தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோமாரி நோயைத் தடுக்க மாவட்ட வாரியாக தடுப்பூசி மருந்தை மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்துக்கு 2,98,100 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com