மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 500 விலை உயா்வு:விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 14th February 2021 02:12 AM | Last Updated : 14th February 2021 02:12 AM | அ+அ அ- |

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 500 வரை விலை உயா்வு கிஏற்பட்டுள்ளதால் மரவள்ளி பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவுத் தயாா் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 5,500க்கு விற்பனையானது. இந்த வாரம் டன்னுக்கு ரூ. 500 வரை விலை உயா்ந்து ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். மரவள்ளிக் கிழங்கு விலை உயா்ந்துள்ளதால் மரவள்ளி பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.